கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய தல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே
மூலாதாரத்தில் மஞ்சள் நிற நான்கிதழ்த் தாமரையில் கணபதி வீற்றிருக்கிறார். பிருத்வி தத்துவத்தின் ‘லம்’ என்னும் பூமி தத்துவத்தை தன் உதரத்தில் கொண்டதால் லம்போதரன் என்று போற்றப்படுகிறார்.
சைவ சித்தாந்தப்படி பதியைப் போல பசுக்களாகிய உயிரும் அநாதி. பிறவிகளில் ஸ்ரேச்டமான மனித பிறவி எல்லா பிறவிகளைப்போல் மண்ணில் துவங்கி, ஆறாம் அறிவான சித்தம் படைக்கப் பெற்றதினால் வாழ்வின் உண்மையான லட்சியமான சிவயோகம் சித்திப்பதற்கு தன் ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும். அதற்கு சிவகுமாரனான விநாயகரின் அருள் வேண்டும். பிறப்பு எடுக்குமுன் அதி சூட்சுமமாக இருக்கும் அந்த உயிர்/ஜீவன் படிப்படியாகக் கீழிறங்கி தூலமயமான தேகத்தை (பிருத்வி - மண்) அடைந்து அதையே தானென்று உணர்ந்து அல்லல்படுகிறது. பிறவியின் பயன் தன்னை அறிவதே. இறையருளால் தன்னுள் பிரவேசித்துத் தன்னைத் தானே உள்ளபடி அறியும் பொருட்டு, பக்குவமடைந்த ஆத்ம சாதகர்களுக்கு மூலாதாரத்தையும், அதன் சக்தியையும் அறியச் செய்து ஜீவப்ரம்ம ஐக்கியத்திற்கு வழிவிட கணபதி அருள்கிறார். அஞ்ஞானத் தடைகளை நீக்கி சுழுமுனை வாசலை திறந்து ஞானசாதகர்களுக்கு வழி ஏற்படுத்துவதால் கணபதியை விக்னேஸ்வரராக வழிபடுகிறோம்.