திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலமந்தமில்லதோர் நாட்டில்
அந்தமில் பேரின்பத்தடிய ரோடு
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ..5..
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன்
அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவாரார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி ..10..
மண்ணுலகத்தோ ருய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்க்
கௌசலைதன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் ….15..
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காக்கநடந்து
வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு, கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண்சிலை யிறுத்து ….20..
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத் தொருகால் அரசு களை கட்ட
மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொனெடு மணிமாட அயோத்தி எய்தி ….25…
அயோத்தியா காண்டம்
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்கக்
கொங்கைவன் கூனி சொற் கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக் கடிய சொற் கேட்டு
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனுமறாதொழியக் …30..
குலக்குமரா ! காடுறைப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலனணியாதே காமரெழில் விழலுடுத் ….35…
அங்கங்கள் மழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேகியின் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்லக்
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்ப் ….40..
பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்குக் காயோடு நீடு கனியுண்டு
வியன் கானம ரத்தி நீழல்
கல்லணைமேல் கண்துயின்று
சித்திரகூடத் திருப்ப, தயரதன் தான் …..45..
” நின் மகன் மேல் பழிவிளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ !
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் “
என்று வானேறத் ….50…
தேனமரும் பொழில்சாரல் சித்திர கூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரத நம்பி பணியத்
தம்பிக்கு மரவடியை வான்பணயம் வைத்துக் குவலயத் ..55..
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவிடை கொடுத்துத்
திருவுடைய திசைக்கருமம் திருத்தப்போய்த்
தண்ட காரணியம் புகுந்து
ஆரண்ய காண்டம்
மறை முனிவர்க்கு
“அஞ்சேல்மின் !” என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக விற்குனிந்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிப்
புலர்ந்தெழுந்த காமத்தால் சீதைக்கு நேராவன்
என்னப் பொன்னிறங் கொண்ட …65..
சுடு சினந்த சூர்ப்பனகாவைக்
கொடி மூக்கும் காதி ரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்துக்
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து ….70..
மலையிலங்கை யோடிப்புகக்
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலை வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஒருவாய் மானை யமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து ..75..
இலைக் குரம்பில் தனி யிருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரிந்து நீள் கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோய்
வம்புலாங்கடிகாவில் சிறையாய்வைக்க ….80…
அயோத்தியர்கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வெய்திச்
சடாயுவை வைகுந்தத்தேற்றிக்
கங்குலும் பகலும் கண் துயிலின்றிக்
கானகம் படி யுலாவி யுலாவிக் ….85…
கணை யொன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனியுவந்து
கிஷ்கிந்தா காண்டம்
வன மருவு கவியரசன் தன்னொடு காதல்கொண்டு
மரா மரமேழெய்து
உருத்தெழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஒட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடனிருந்து வைதேகி தனைத்தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து ..95…
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூதுரைத்தல் செப்ப !
ஸூந்தர காண்டம்:
சீராரும் திறல் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள்நீள் இலங்கை புக்குக்கடிகாவில்
வாராருமுலை மடவாள் வைதேகி தனைக்கண்டு …100
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய் !
” அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதினிதிருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டங்கார்த்ததும்
கலக்கியமா மனத்தளாய்க் கைகேயி வரம்வேண்ட …105
மலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழியக்
‘குலக்குமரா !
காடுறைப்போ ‘ என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடங்கேகியதும்,
கங்கை தன்னில்,
கூரணிந்த வேல்வலவன் குகனோடு ….110..
சீரணிந்த தோழமை கொண்டதுவும்,
சித்திரகூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட மூவுலகும் திரிந்தோடி
“வித்தகனே ! ராமா ஓ ! நின்னபயம் ” என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ….115…
பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாட
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித் தெம்பிரானேகப்
பின்னேயங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோனுரைத்த அடையாளம்
“ஈதவன்கை மோதிரமே” என்று ….120…
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
“அநுமான் அடையாளம் ஒக்கும்” என்று
உச்சிமேல் வைத்துகக்கத் ….125…
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர்கோன் மாக்கடிகாவை யிறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து மீண்டு, அன்பினால் ….130..
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணைபணிய
யுத்த காண்டம்
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடி யோனிலங்கை புகலுற்று
அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய் ….135..
விரிநீ ரிலங்கை யருளிச்
சரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய
மலையாலணைகட்டி மறுகரையேறி
இலங்கை பொடி பொடியாகச் ….140..
சிலைமலி செஞ்சரங்கள் செல வுய்த்துக்
கும்பனொடு நிகும்பனும்பட
இந்திரசித் தழியக் கும்பகர்ணன் பட
அரக்காவி மாள, அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரமாட …145…
இலங்கை மன்னன் முடி யொருபதும்
தோளிருபதும் போயுதிரச்
சிலைவளைத்துச் சரமழை பொழிந்து
கரந்துணிந்து வெற்றிகொண்ட செருக்களத்துக்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் …150..
எண்மீர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து
மணிமுடி பணிதர அடியிணை வணங்கக்
கோலத்திருமா மகளோடு
செல்வவீடணன் வானரக் கோனுடன் ….155..
இலகுமணி நெடுந்தேரேறி
சீரணிந்த குகனொடுகூடி
அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி எய்தி
நன்னீராடிப்
பொங்கிளவாடை யரையில் சாத்தித் …..160..
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலனணிந்து
சூட்டு நன் மாலைகளணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நண்பகலும் ஆட்செய்ய ..165..
வடிவிணை இல்லாச் சங்குதங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடை சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.
— ஸ்ரீ திவ்வியப் பிரபந்தப் பாசுரப்படி ராமாயணம் முற்று!